No icon

இளைஞர் மாநாடு

கிறிஸ்தவ இளைஞர்  மாநாட்டிற்கு இந்து  அடிப்படைவாதிகள் இடையூறு

ஆண்டுதோறும் நடத்தப்படும் கிறிஸ்துவ இளைஞர் மாநாடட்டை மதம் மாற்றுவதற்கான மாநாடு என்று கூறி வலதுசாரி இந்து அடிப்படைவாதிகள் அக்கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திருப்பது கிறிஸ்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காந்துவா மறைமாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் இளைஞர்களுக்கான மாநாடு நடத்தப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2 ஆண்டுகள் இக்கூட்டம் நடைபெறவில்லை. எனவே இந்த ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை மாநாட்டை கந்துவா மறைமாவட்டத்தின் புனித பயஸ் பள்ளியில் நடத்த திட்டமிட்டிருந்தது. இம்மாநாட்டுக்குச் சென்ற இளைஞர்களின் வண்டிகளை வழி மறைத்து அவர்களை மாநாட்டுக்கு செல்லக்கூடாது என்று கூறி இந்த அடிப்படை வாதிகள் இடையூறு விளைவித்திருக்கின்றனர்.

இது குறித்து இம்மறைமாவட்டத்தின் மக்கள் தொடர்பு செய்தியாளர் அருட்தந்தை ஜெயன் அலெக்ஸ் அவர்கள்கத்தோலிக்க கிறிஸ்தவ இளைஞர்களின் ஆளுமையை மேம்படுத்தவும், பல்வேறு தொழில்களில் தங்கள் திறன்களை அவர்கள் வளர்த்துக் கொள்ளவும் மேலும் நாட்டிற்கு உறுதுணையாக இருக்கவும் அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே இம்மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு இந்த ஆண்டு 450 இளைஞர்களுக்கு இம்மாநாடானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்கனவே 200 இளைஞர்கள் மாநாட்டிற்கு வந்து விட்டனர். மீதமுள்ளவர்கள் வந்து கொண்டிருக்கும் போது சில இந்து அடிப்படைவாதிகள் அவர்களுக்கு இடையூறு விளைவித்து வன்முறையில் ஈடுபட்டிருக்கின்றனர். இது உண்மையாகவே கண்டிக்கப்பட வேண்டிய செயல்என்று மேட்டர்ஸ் இந்தியா செய்தி நிறுவனத்திடம் கூறினார். அருட்தந்தை ஸ்டீபன் அவர்கள்மாநிலத்தில் இதுபோன்று நடப்பது முதன்முறையல்ல. அடிக்கடி இந்து அடிப்படைவாதிகள் மதமாற்றத் தடைச் சட்டத்தை பயன்படுத்தி கிறிஸ்துவ நிறுவனங்களையும், கிறிஸ்துவர்களையும் தாக்குவதை தங்கள் முக்கிய வேலையாக கொண்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கம் சிறுபான்மை மக்கள் மேல் நடத்தப்படும் வன்முறையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இந்த மாநாடு திட்டமிட்டப்படி மீண்டும் நடத்தப்படும்என்று தெரிவித்தார்.

Comment